‘மக்களவையில் 40க்கு 40 சாத்தியமாவது சிக்கல்’

ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி என்பதை வலியுறுத்துவதற்காகவே இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டதா?

உதயநிதி ஸ்டாலின்
  • எழுதியவர்,ச. பிரசாந்த்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

சேலம் மாவட்டத்தில் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக, 2-ஆவது மாநில இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது திமுக.

மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த மாநாட்டின் மூலம் திமுகவின் அடுத்த அதிகார முகமாக உதயநிதியை அக்கட்சி முன்னிறுத்துகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

திமுகவில் 1968-ம் ஆண்டு ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’ அணியை, 1980-ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணியாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார்.

தொடக்கத்தில் இளைஞரணியின் மாநில அமைப்பாளராக இருந்த ஸ்டாலின் பின் இந்த அணியின் செயலாளரானார். அதன்பின், 2006-ல் திமுக ஆட்சி அமைந்த பின், 2007 டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் தலைமையில், முதலாவது மாநில இளைஞரணி மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்தியது திமுக.

இந்த மாநாடு முடிந்து இரண்டு ஆண்டுகளில் ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன், கட்சியின் அதிகார முகமாகவே அவரை முன்னிறுத்தியது திமுக.

மாநாட்டில் திமுகவின் முன்னோடிகளுக்கும் இந்நாள் தலைவர்களுக்கும் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

உதயநிதி தலைமையில் இரண்டாவது மாநாடு

ஸ்டாலினின் அதே வழியில் உதயநிதியை பயணிக்க வைக்கும் திமுக மேலிடம், 2019-ல் உதயநிதியை இளைஞரணி செயலாளராக நியமித்தது. அதன்பின், எம்எல்ஏவாகி தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி வலம் வருகிறார்.

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப்பின் இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், நேற்று (ஜன. 21) நடத்தியது திமுக

இதை மாநில இளைஞரணி மாநாடாக மட்டுமின்றி, மாநில உரிமை மீட்பு மாநாடாகவும் அறிவித்து மாநாட்டை நடத்தினர்.

2007-ல் ஸ்டாலினின் இளைஞரணி மாநாட்டை மூத்த நிர்வாகிகள் முன்னின்று நடத்தியதைப்போல, இந்த மாநாட்டை திமுகவின் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர்.

ட்ரோன் காட்சிகளும் மாநாட்டில் நிகழ்த்தப்பட்டன.

1.5 லட்சம் பேருக்கு இருக்கை, 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, காணுமிடமெல்லாம் பேனர்கள்; பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் இணைந்திருப்பது போன்ற பிரமாண்ட கட் அவுட்கள் என, மிக பிரமாண்ட ஏற்பாட்டில் நடந்தது இளைஞரணி மாநாடு.

உதயநிதியின் எய்ம்ஸ் ஒற்றைச்செங்கல் பிரசாரம் தொடங்கி, சமீபத்தில் சனாதனம் குறித்து உதயநிதி பேசியிருந்தது தேசிய அளவில் சர்ச்சையாகி, பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா என, பாஜக தலைவர்கள் பலர் விமர்சித்திருந்தனர்.

தேசிய அளவில் உதயநிதிக்கு அரசியல் பார்வை கிடைத்ததை வலியுறுத்தும் விதமாகவும் பேனர்கள் வைக்கப்பட்டு, உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை கையில் வைத்திருப்பது போன்ற ட்ரோன் காட்சிகளும் மாநாட்டில் நிகழ்த்தப்பட்டன.

திமுக மூத்த தலைவர்கள் உதயநிதியை பாராட்டி பேசினர்.

மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்கள்

நீட் விலக்கு, ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும், கல்வி மற்றும் மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், கல்லூரி வேந்தர் பதவியை மாநில முதலமைச்சர் வசமே ஒப்படைக்க வேண்டும், ”குலக்கல்வியை புகுத்தும்” தேசிய கல்வி கொள்கையை எதிர்த்துப் போராட்டம் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பெரும்பாலான தீர்மானங்கள் மத்திய பாஜக அரசை சாடும் வகையிலும், பாஜகவை எதிர்க்கும் வகையிலும் தான் இருந்தது.

திராவிடம் சொல்லும் மனித நேயம், சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்புகளில் மூத்த தலைவர்கள் பாஜகவை விமர்சித்து பேசியதுடன், உதயநிதியும் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

பாஜகவை கடுமையாக சாடிய உதயநிதி

மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‘‘இன்று கல்வி, சுகாதாரம் என எல்லா துறைகளையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, மாநில அரசின் உரிமையை பறித்துள்ளது. கல்வி, மொழி, நிதி, வேலைவாய்ப்பு உரிமைகளை பறித்து, பண்பாட்டு ரீதியில் நம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது மத்திய பாஜக அரசு. ’உயிர்கொல்லி நோயான’ நீட் தேர்வால் 11 குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர்” என்றார்.

பாஜகவினர் தொடர்ந்து தமிழ் மொழியை அழிக்க போராடி வருவதாகவும் ஆனால், பா.ஜ.கவால் ஒருபோதும் தமிழ் மொழியை அழிக்க முடியாது, தமிழ்நாட்டில் காலூன்றவும் முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சியினரை அமலாக்கத்துறை மூலம் பாஜக தொடர்ச்சியாக மிரட்டி வருவதாக பேசிய உதயநிதி, அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று தெரிவித்தார். அதனை கூறும்போது, “நாங்கள் இ.டி–க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம்” என்றார்.

”திமுக அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணி மாபெரும் வெற்றியைப்பெறும். இந்தியா முழுவதிலும் காவிச்சாயம் பூச நினைக்கின்ற ஆதிக்கவாதிகளை அழித்து, சமூக நீதி வர்ணத்தை பூசுவதே எங்களின் லட்சியம்,’’ என, பாஜகவை கடுமையாக சாடி பேசினார்.

மாநாட்டில் கட்சிக்கொடியை கனிமொழி எம்.பி. ஏற்றினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ”தெற்கில் விடியல் பிறந்திருப்பதைப்போல விரைவில், இந்திய நாடு முழுவதும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. எனக்கு முப்பது வயது இருக்கும்போது தலைவர் கருணாநிதியும், அன்பழகனும் இளைஞரணியை உருவாக்கினார்கள். அவர்கள் எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியதுபோல என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிக்கொடி கட்டும் கொள்கைப் படையாக இளைஞரணி செயல்பட்டு வருவதை, இந்த சேலம் மாநாடு, நாட்டுக்கே சொல்லிவிட்டது” என்றார்.

மேடையில் பேசிய பல தலைவர்களும் திமுகவின் சாதனைகளை பேசி, பாஜகவை கடுமையான சாடினர். மேலும், மூத்த தலைவர்கள் அனைவருமே உதயநிதியை புகழ்ந்து பேசினர்.

ஒட்டுமொத்த மாநாட்டிலும் உதயநிதியை சுற்றியே அதிக கவனம் இருக்கும் வகையில் மாநாட்டை திமுகவினர் அமைத்திருந்தனர்.

இதனால், சேலம் மாநாடு தமிழ்நாட்டில் உதயநிதிக்கான வலுவான பிம்பத்தை கட்டமைக்கவும், திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதிதான் என்பதை மறைமுகமாக தெரிவிக்கவும் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உதயநிதியை முன்னிறுத்துவதற்கான மாநாடு தான் என்கிறார் ப்ரியன்.

‘இது உதயநிதிக்கான மாநாடு தான்’

திமுகவின் இளைஞரணி மாநாடு ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அமைச்சர் உதயநிதிதான் என்பதை காண்பிப்பதற்கான மாநாடு தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பிபிசி தமிழிடம் பேசிய ப்ரியன், ”ஸ்டாலின் 2007-ல் இளைஞரணி மாநாட்டை நடத்திய பின் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதால், உதயநிதிக்கும் அதேபோன்று துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுமென எதிர்பார்க்க முடியாது.

மக்களவை தேர்தலுக்கு முன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கினால், குடும்ப அரசியல் என்ற எதிர்கட்சிகளின் வலுவான குற்றச்சாட்டை ஸ்டாலின் சந்திக்க வேண்டிவரும்” என்றார்.

மேலும், துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக போதிய அளவு வெற்றி பெறாவிட்டால், உதயநிதி மீது அவப்பெயரும், கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியும் ஏற்படுமென்பதால் அப்பதவியை கொடுக்கமாட்டார்கள் என தான் கருதுவதாக ப்ரியன் தெரிவித்தார்.

”ஆனால், உண்மையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என்ற பதவி தேவையே இல்லை. ஏனென்றால், தற்போதே அவர் துணை முதலமைச்சர் அளவுக்கான அதிகாரங்களுடன் வலம் வருகிறார். அதை கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டு தான் செயல்பட்டு வருகின்றனர். ஸ்டாலினுக்கு அடுத்த தலைவர் உதயநிதிதான் என்ற மனநிலையில் தான் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்,’’ என்கிறார் அவர்.

உதயநிதிக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் பணி ‘பெரிய டாஸ்க்’ தான் என்கின்றார் ப்ரியன்.

மேற்கு மண்டலத்தில் கால்பதிக்க சேலத்தில் மாநாடு

சேலத்தில் ஏன் மாநாடு நடத்தப்பட்டது? மாநாடு முழுவதிலும் உதயநிதியை மையப்படுத்துவது ஏன்? என்ற கேள்விகளை முன்வைத்தோம்.

அதற்கு பதிலளித்த ப்ரியன், ‘‘சேலத்தின் இளைஞரணி மாநாடு முற்றிலுமாக உதயநிதிக்கானதுதான், அவரின் கையில் அதிகாரம் குவிகிறது. திமுகவின் முகம் உதயநிதிதான் என்பதை வலியுறுத்தத்தான் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்ற கருத்தை உடைக்கவும், மேற்கு மண்டலத்தில் திமுக வலுவாக உள்ளது என்பதை காண்பிக்கவும் தான் சேலத்தை தேர்வு செய்துள்ளனர்” என்றார்.

சேலம், கோவையை கொண்ட மேற்கு மண்டலத்தின் திமுகவின் முகமாக இருந்த செந்தில்பாலாஜி சிறையில் இருப்பதால், அங்கு சிறப்பான ஆளுமை திமுகவிடம் இல்லை என ப்ரியன் தெரிவித்தார்.

”இதை சரிகட்டி அங்கு வலுவான அடித்தளம் அமைக்கதான் உதயநிதியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளது. மேற்கு மண்டலத்தை கைப்பற்ற முதற்கட்டமாகத்தான் சேலத்தில் இந்த மாநாட்டை நடத்தியுள்ளனர். உதயநிதியின் பிம்பத்தை வலுப்படுத்த இந்த மாநாடு நடந்தாலும், மேற்கு மண்டலம் உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட பெரிய ’டாஸ்க்’ என்று தான் பார்க்க வேண்டும்,’’ என்கிறார் அவர்.

திராவிட கொள்கைகளை உதயநிதி முன்னிறுத்துவதாக ‘தராசு’ ஷ்யாம் கூறுகிறார்.

‘திராவிடத்தை வலுவாக பேசும் உதயநிதி’

பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ’தராசு’ ஷ்யாம், ‘‘2007-ல் ஸ்டாலின் தலைமையில் நடந்த இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்கள் அனைத்தும், 2009 மக்களவை தேர்தலில் பாஜகவை முதன்மை எதிரியாக முன்வைத்து நிறைவேற்றப்பட்டது. இன்று உதயநிதி தலைமையிலான மாநாட்டிலும், வரும் மக்களவை தேர்தலுக்காக, பாஜகவை முதன்மை எதிரியாக வைத்து தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றார்.

கருணாநிதி திராவிடம் குறித்தும், சனாதனத்துக்கு எதிராகவும் பொதுவெளியில் மிக தைரியமாக கருத்தை முன்வைப்பவராக அறியப்பட்டார். அவருக்குப்பின் திராவிட கொள்கைகளை பேசும் தலைவர்கள் குறைந்துவிட்டதாக கூறும் ஷ்யாம், ”கருணாநிதியின் பேரனாக தன்னை முன்வைத்து உதயநிதி கையிலெடுத்துள்ளார். அவரின் திராவிட கருத்துக்கள், சனாதனத்துக்கு எதிரான கருத்துக்கள் தேசிய அளவில் பிரபலமாகி, தேசிய அரசியலில் பார்க்கும் நபராக மாறியுள்ளார். அதையும் வெளிக்காட்டும் விதமாகத்தான் மாநாட்டில் தலைவர்கள் பேசியுள்ளனர்,’’ என்றார்.

மாநாட்டில் குவிந்த தொண்டர்கள், நிர்வாகிகள்

‘மக்களவையில் 40க்கு 40 சாத்தியமாவது சிக்கல்’

மேலும் தொடர்ந்த ஷ்யாம், ‘‘2007 மாநாட்டுக்குப்பின் 2009 மக்களவையில் மூன்றாவது அணியான விஜயகாந்தின் தேமுதிக வாக்குகளை பிரித்ததால் திமுகவுக்கு போதிய வெற்றி கிடைக்காமல் 40-க்கு 40 என்ற கனவு தகர்ந்தது.

தற்போதைய மாநாட்டிலும் 40-க்கு 40 என்ற இலக்கை முன்வைக்கின்றனர். தற்போது தமிழகத்தில் மூன்றாவது அணிக்கான வெற்றிடத்தை பாஜக நிரப்பும். இந்த மூன்றாவது அணி கூட்டணி அமைத்து வாக்குகளைப் பிரித்தால் தேர்தல் முடிவுகள் மாறும், சிக்கல் ஏற்படும்,’’ என்கிறார் அவர்.

கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் உதயநிதி முன்னிறுத்தப்படுவதால் திமுக மீதான வாரிசு அரசியல் விமர்சனம் பலம் பெறுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மாநாட்டுக்கு உதயநிதியின் மகன் இன்பா உதயநிதி வந்ததையும் சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்திருந்தனர்.

இதுகுறித்து, பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “கட்சியிலோ ஆட்சியிலோ உதயநிதி முன்னிறுத்தப்படவில்லை. இந்த மாநாடும் உதயநிதிக்காக நடத்தப்பட்டது அல்ல. பாஜகவை விமர்சித்துத்தான் அனைத்து தலைவர்களும் பேசியுள்ளார்கள்” என்றார்.

நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உதயநிதியை முன்னிறுத்துவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நீட் உள்ளிட்டவை இளைஞர்களை, மாணவர்களை பாதிக்கும் விஷயம் என்பதால், இளைஞரணி செயலாளராக அவர் சில முன்னெடுப்புகளை மேற்கொள்கிறார்” என்றார்.

Exit mobile version